கலைகள் நடனம், இசை, நாடகம் போன்ற அரங்காடல் கலைகளையும், கதை, கவிதை, கட்டுரை போன்ற எழுத்துகலைகளையும், ஓவியம், புகைப்படம் போன்ற கட்புலக் கலைகளையும், கைப்பணிகள், சிற்பம் போன்ற தொழில்சார் கலைகளையும் குறித்து நிற்கின்றது எனலாம். எக் கலையானாலும் அதற்குரிய கலைப் பின்புலம் (கலை பற்றிய அறிவு, அழகியல் பார்வை), செய்திறன், சமூகப் பயன்பாடு என்பன இருக்கும். எனினும் கலைகள் இவை, இவை கலைகள் அல்ல என்று எச் செயற்பாட்டையும் இறுதியுடன் சொல்ல முடியாது. மேலும் கலைகள் சமூகம் சார்ந்தவையாகவும் இருக்கின்றன. அதாவது, பொருள் படைத்தவர்கள் கலைகள், பொதுமக்கள் கலைகள், அல்லது இன அடிப்படையிலான கலைகள் என பல சமூகத் தாக்கங்களும் கலைகளுக்கு உண்டு. எனவே கலைகள் பல நிலைகள், தளங்களில் ஆயப்படவேண்டியவை.